Monday, April 26, 2010

தேடல்

தூக்கம் கண்களை தழுவையிலே
கண்களில் கனவுகள் சுழல்கின்றன..
கனவுகள் கற்பனை அள்ளித்தர - அந்த
கற்பனை கவிதையாய் மலர்கின்றது..

முன்னொரு காலத்தில் நடந்ததெல்லாம்,
மனதிலே ஓடிடத் தெரிகின்றது..
என்னிரு கண்களில் ஏதேதோ
நினைவுகள் நீர்த்துளி அளிக்கின்றது....

ஆற்று நீர்போல வாழ்ந்திருந்தேன்,
ஆடிப்பாடித் திரிந்தி ருந்தேன்..
கவலை ஒருதுளி இல்லாமல் -தாயின்
கதகதப்பில் களித் திருந்தேன்

வெயில் கொளுத்தும் நாட்களிலே,
வேப்ப மரத்து நிழலினிலே,
விளையாட் டோடு மகிழ்ந்திருந்தேன்..
வெகுளி யாக வாழ்ந்திருந்தேன்

காலம் மெல்ல சுழல்கையிலே,
கோலம் எல்லாம் மாறிடவே,
கூட்டைவிட்டு பறந்து வந்தேன்
ஏட்டுக் கல்வி பயின்றிடவே..

பயின்ற கல்வி பலனாலே,
பார்க்கும் வேலை அதனாலே,
பணம் சேமிப்பாக சேருதடா - பாசம்
பழங்கதை யாக ஆனதடா..

தூக்கம் தொலைத்த இரவுகளும்,
ஏக்கம் நிறைந்த கனவுகளும்,
எனக்குள் வந்து நிறைந்ததடா - என்
நிம்மதி எங்கோ தொலைந்ததடா..

பணமும் பகட்டும் பதவிபோதையும்,
பகல்வேடம் போடும் நிலையும்,
தினமும் என்னை துரத்துதடா - என்
மனமும் என்னை வெறுக்குதடா..

எதையோ தேடும் வேகத்தில்,
ஓடித் திரியும் மனிதர்கள்..
ஆடி அடங்கும் வாழ்க்கையெனும்,
அர்த்தம் அறியா அற்பர்கள்..

எதைத்தேடி திரிகிறோம் என
தேடுப வர்க்கே தெரியாது..
தேடினாலும் கிடைக்காது -
எனினும்தேடும் கூட்டம் நிற்காது..

இந்த வாழ்க்கை எத்தனைநாள்...??
இந்த தேடல் எத்தனைநாள்...??
மீண்டும் சிறுவன் ஆவேனா..??
பள்ளிக் கூடம் போகாமல் - என்
கிராமத் தோடே இருப்பேனா...??

நேசம் மிகுந்த கூட்டுக்குள் - என்
வாழ்க்கை மீண்டும் திரும்பிடுமா...??
இல்லை,
மரணம் என்னை தொடும் வரையில்
நானும் தேடல் தொடர்வேனா....??

2 comments:

  1. தேடல் இல்லாத மனிதருண்டா? தேடல் இருக்கும் மனிதருக்கே தினம் பசியெடுக்கும் என சான்றோர் சொன்னார். தேடல் தொடரும் உங்களுக்கும்:)!

    தேடல் அருமை.

    ReplyDelete
  2. விரும்பியோ, விரும்பாமலோ...தேடல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது...!

    ReplyDelete